என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவிரி பிரச்சனை"
- ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
- கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூா்:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நீர்வரத்து, வடிகால் வாரிகளையும், ஏரி குளங்களையும் உடனே தூர்வார வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் செய்து வருகிறது . கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 90 டி.எம்.சி. தண்ணீர் தரவில்லை. நடப்பாண்டில் 10 டி.எம்.சி தண்ணீர் தரவில்லை. ஒட்டு மொத்தத்தில் தமிழத்திற்கு தரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீரை தராமல் வஞ்சிக்கிறது.
எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளது. எனவே உடனடியாக நம்மக்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும். அடுத்த கட்டமாக அனைத்து விவசாய அமைப்புகள், பல்வேறு கட்சி நிர்வாகிகளை அழைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
- காவிரி தாய்க்கு விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருவையாறு:
காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறந்து விடபடவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் வேதனையில் உள்ளனர். ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்யமண்டப படித்துறை அருகே காவிரி தாய்க்கு விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம், தஞ்சை நெற்களஞ்சிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நடுவ நிறுவனா் அரு.சீா். தங்கராசு தலைமை வகித்தாா்.
இதில், காவிரி ஆற்றில் காவிரித்தாய் என்ற எழுத்து வடிவில் மாப்பிள்ளை சம்பா நாற்று நட்டு வைக்கப்பட்டது. மேலும், காவிரித்தாய் படத்துக்கு பூஜைகள், தீபாராதனைகள் செய்து, காவிரியில் தண்ணீா் திறந்துவிட வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
- மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த 1 - ந்தேதி நடைபெற்றது. இதில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது என்று தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் , மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மேகதாது அணை தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார் எரிந்து கொண்டிருந்த நகல் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- காவிரி விவகாரத்தில் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.
மண்டியா:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து கர்நாடகத்தில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியாக மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினா் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள விசுவேஸ்வரய்யா பூங்காவில் கடந்த 33 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 34-வது நாளாக நேற்றும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு அமைப்பினரும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
நேற்று விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் மண்டியா டவுனில் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் மண்டியா நகர் ஜெயசாமராஜ உடையார் சர்க்கிளில் கர்நாடக சேனா அமைப்பினா் தேங்காய் கூடுகளை காண்பித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் குற்றம்சாட்டினர்.
மேலும் மண்டியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் மைசூரு-பெங்களூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்ற அவர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். அப்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு பல தகாப்தங்களாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கன்னடர்களுக்கு பேரடி விழுகிறது. காவிரி விவகாரத்தில் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் மாநில அரசு, விவசாயிகளின் நலனை காக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
காவிரி நீரை நம்பி உள்ள மண்டியா, மைசூரு, பெங்களூரு மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவார்கள். தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும்.
காவிரி விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள 3 அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. காவிரி விவகாரத்தில் நமக்கு அநீதி ஏற்படுவதால் கர்நாடகத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக காவிரி படுகையில் உள்ள மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசின் பார்வை நம் பக்கம் திரும்பும் என்றனர்.
- நடப்பாண்டு வழக்கமான மழைப்பொழிவு இருந்ததாக தவறான அனுமானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது
- காவிரி மேலாண்மை ஆணையம் திங்கட்கிழமை கூடுவதாக கூடுதல் சொலிட்டர் ஜெனரல் தகவல்
தமிழகத்திற்கு போதுமான தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட, கர்நாடக அரசு மறுத்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை இன்று பிஆர் கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, தினசரி 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் அமர்வு மறுத்துவிட்டது.
மேலும், ''இந்த விஷயத்தில் எங்களுக்கு எந்த நிபுணத்துவமும் இல்லை. கூடுதல் சொலிட்டர் ஜெனரல், இதற்கான ஆணையம் வருகிற திங்கட்கிழமை கூடுகிறது. அப்போது அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிடக் கூடிய தண்ணீர் அளவு குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணயைம் தண்ணீர் திறந்து விடுவதற்கான வழிமுறைகள் பின்பற்றபட்டதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கை சமர்பிப்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறோம்'' எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் கர்நாடாக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நடப்பாண்டு வழக்கமான மழைப்பொழிவு இருந்ததாக தவறான அனுமானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 25 சதவீத அளவுக்கு மழைப்பொழிவு குறைந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் மனுவிலும், கர்நாடகத்திலுள்ள 4 அணைகளுக்கான நீர்வரத்து 42.5 சதவீதம் குறைந்திருப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் பதிவு செய்துள்ளது.
கர்நாடகத்தின் அணைகளுக்கான நீர்வரத்து ஆகஸ்டு 8-ந்தேதி நிலவரப்படி 42.5 சதவீதம் குறைந்திருப்பதால், தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி காலம் ஜூன் 12-ந்தேதி முதல் செப்டம்பர் இறுதி வரை ஆகும். இதற்கு 37.27 டி.எம்.சி நீரே போதுமானது. காவிரி மேலாண்மை ஆணையத்தால் மதிப்பிடப்பட்ட இந்த கொள்ளளவை சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டு தீர்ப்பில் மாற்றம் செய்யவில்லை.
மேட்டூர் அணையில் ஆகஸ்டு 23-ந்தேதி நிலவரப்படி 21.655 டி.எம்.சி. நீர் உள்ளது. நாள்தோறும் 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து வருகிறது. எனவே தமிழ்நாட்டில் போதுமான நீர் உள்ளதால், இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டியதில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுஆய்வு செய்யக்கோரி கர்நாடக அரசு ஆணையத்தில் மனு செய்துள்ளது.
மேகதாது அணை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் தேவையற்ற எதிர்ப்பே தற்போதைய பிரச்சினைக்கு காரணம். மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் 13 டி.எம்.சி அளவுக்கான கூடுதல் நீர் தமிழ்நாட்டில் ஜூன்-ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வறட்சியை தடுக்க உதவியிருக்கும். எனவே நீதியின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
- காவேரி நதிநீர் திறப்பில் உறுதியான, திடமான முடிவினை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.
- தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காவேரி விஷயத்தில் மென்மையானப் போக்கினை கடைபிடிப்பது வருந்தத்தக்கது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்ட நிலையில், 'தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடகா முடிவு எடுத்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பினை அவமதிப்பதாகும்.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்.
ஆனால், இதுவரை வெறும் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 55.83 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டிய நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இதுகுறித்து கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது.
இந்தக் கூட்டம் முடிந்தவுடன் நிருபர்களிடம் பேட்டியளித்த கர்நாடக மாநில முதலமைச்சர், இனியும் தண்ணீர் கொடுக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் தீர்வு காண்பதற்காக பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது என்பதற்காக வழக்கம்போல், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காவேரி விஷயத்தில் மென்மையானப் போக்கினை கடைபிடிப்பது வருந்தத்தக்கது.
தமிழ்நாட்டிற்கு உரிய காவேரி நீரை திறந்து விட்டால்தான் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறுமேயானால், தமிழ்நாட்டிற்கு உரிய நீர் உடனடியாக கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு உண்டு. ஆனால், அதைச் சொல்ல தி.மு.க. தயங்குகிறது. இது தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்.
காவேரி நதிநீர் திறப்பில் உறுதியான, திடமான முடிவினை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.
தி.மு.க. அரசு தனது பொறுப்பினை உணர்ந்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தினை எடுத்துரைக்க வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டிலும் வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய வைகோ கூறியதாவது:-
தமிழகத்தில் 64 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் தேர்தல் பணிக்குழு நியமனம் நடைபெற்று வருகிறது. 70 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. தி.மு.க., அ.தி.மு.க. வை அடுத்து ராணுவ கட்டுப் பாட்டுடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாராளுமன்றத்திற்கு முதல் கட்டமாக நடைபெறும் தேர்தலிலேயே தமிழகத்துக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்.
கூட்டாட்சி தத்துவத்தை மோடி மதிப்பதில்லை. பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விதி விலக்காக கூட்டாட்சி தத்துவத்தையும், மதசார்பற்ற தன்மையும் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தவர் வாஜ்பாய். மோடி அப்படி செயல்படவில்லை. அவர் தமிழர்களுக்கு ஏராளமான கெடுதல் செய்துள்ளார். பதவி ஏற்ற போதே ராஜபக்சையை அழைத்து முதுகில் குத்தினார்.
காவிரி பிரச்சினையில் மேகதாது அணை கட்ட மறைமுக ஆதரவு அளித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தஞ்சை பகுதி விவசாய நிலங்களை பாலை வனமாக்க முயன்றார்.
கஜா புயலின் போது நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. நியூட்ரினோ திட்டம், முல்லை பெரியார் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை பூங்கா ஆகிய வற்றின் மூலம் தமிழர்களுக்கு கெடுதல்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே தான் மோடி வரும் போது கருப்புக் கொடி காட்டுகிறோம்.
என்னை அடிப்பதோ, கொல்வதோ கஷ்டமல்ல. இந்த ஆட்சியில் எத்தனையோ கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே அரசு நிகழ்ச்சிக்கு வரும் போது மட்டுமே மோடிக்கு கருப்புக்கொடி காட்டுகிறோம். இப்போது நாங்கள் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளோம். கலைஞர் நினைவோடு இருக்கும் போதே அவரிடம் வாக்கு கொடுத்து விட்டேன்.
அதன்படி மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன். ஸ்டெர்லைட் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இது மக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வர வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இனி யாரும் போராடக்கூடாது என்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் கூலிப்படையாக இந்த அரசு செயல்படுகிறது.
மத்திய அரசின் கைப் பாவையாக செயல்பட்டு மக்கள் நலனை புறம் தள்ளும் அ.தி.மு.க. தோற்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும்.
இந்த ஜனநாயக விரோத குற்றத்தை தேர்தல் ஆணையம் செய்யாது என கருதுகிறோம். பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அரசு பணம் கொடுத்து விட்டது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் அ.தி.மு.க., பா.ஜனதாவை தோற்கடிப்பார்கள். 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். 2004-ல் நடந்தது போன்று 2019-ல் நடைபெறும்.
காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா வந்திருப்பதன் மூலம் வட மாநிலங்களில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதுகிறது. எனவே வட மாநிலங்களிலும் பா.ஜனதா படுதோல்வி அடையும். நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு 125 இடங்களுக்கு மேல் கிடைக்காது. காங்கிரஸ் கட்சி தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்.
புதுவையில் கவர்னருக்கு எதிரான முதல்-அமைச்சர் நாராயணசாமி போராட்டம் நியாயமானது. கவர்னர் பதவி என்பது ஒழிக்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #vaiko #mkstalin #parliamentelection #pmmodi
திருமலை:
திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று இரவு திருமலைக்கு வந்தார். இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்தில் பங்கேற்று குமாரசாமி சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மக்களும் தமிழர்களும் எதிரிகள் அல்ல. அவர்கள் சகோதரத்துவத்துடன் உள்ளனர். இயற்கை ஒத்துழைக்காததால் மழை இல்லாத காரணத்தினால் மட்டுமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அனுப்ப முடியாமல் உள்ளது.
இதனால் பிரச்சனை தொடர்ந்து வருகிறது இதனை பல்வேறு கட்சிகள் அரசியல் ஆக்குவதால் பிரச்சனை தொடங்குகிறது. இரு மாநில அரசும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி பிரச்சனையில் சுமூகமான தீர்வை காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #CauveryIssue
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி: காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: சேலம்-சென்னை 8 வழி பசுமைசாலைக்கு 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் உள்ளிட்ட யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது தமிழக அரசின் நோக்கம் இல்லை. ஒட்டுமொத்த பொது மக்களின் நலனுக்காகவும் இந்தியாவிலேயே இரண்டாவது பசுமை வழிச்சாலையான 8 வழி சாலை திட்டம் தமிழகத்திற்கு செயல்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தொழில் வளத்தில் தமிழகம் பெரிய அளவில் வளரும் வாய்ப்புள்ளது. எட்டு வழி சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தென்னை மரம், மா மரத்திற்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNCM #Edappaipalaniswami #greenexpressway
காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார். போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசை தாக்கிய வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து வீடியோ காட்சியை வைத்து அந்த நபர் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
எண்ணூர் திலகர் நகர் பகுதியை சேர்ந்த மதன்குமார் (23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் கடந்த மாதம் 31-ந்தேதி போலீசில் சிக்கினார். புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
மதன்குமார் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மதன்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
ஐ.பி.எல். போராட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீசார் மேலும் பலரை தேடி வருகிறார்கள். #cauveryissues
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு துளியும் அழகல்ல என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
காவிரி பிரச்சனையில் முதல் பேச்சுவார்த்தையை துவக்கியது, நடுவர் மன்றத்திற்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத்தீர்ப்பு பெற நடுவர் மன்றத்திற்கு உச்சநீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதி தீர்ப்பு பெற்றது அனைத்துமே கருணாநிதி முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகள் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது திருவாய் மலர்ந்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் நீங்கள் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் வங்காள விரிகுடா கடலில் தான் அ.தி.மு.க. அரசு கிடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை. மு.க.ஸ்டாலின் கண் அசைத்தால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் களத்தில் இறங்கினால் ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஏதோ விபத்தில் முதலமைச்சராகி விட்ட பழனிசாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்கு ரெடியாக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் இயலாமையால், மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்திருப்பதால் கர்நாடக அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடியை தாண்டியிருக்கக் கூடும். அணைகளின் நீர் இருப்பும் 25 டி.எம்.சியைத் தாண்டியிருக்கக் கூடும். இது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு போதுமானதாகும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சியும், ஜூலையில் 34 டி.எம்.சியும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை கடந்த ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளே ஆணையத்தில் தமிழகத்தின் பகுதி நேர உறுப்பினர் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் 10 நாட்களாகியும் கர்நாடக அரசின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக இன்றைக்குள் உறுப்பினரை அறிவிக்கும்படி கர்நாடக அரசுக்கு கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை தாமதப்படுத்துவதற்காக இன்றும் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு அறிவிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு அறிவிக்கப்படாத சூழலில், அதைக் காரணம் காட்டி ஆணையத்தின் முதல் கூட்டம் தாமதப்படுத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு மேலும் பாதகத்தை ஏற்படுத்தும். அது குறுவை சாகுபடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக தகர்த்துவிடக் கூடும்.
எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு இன்றைக்குள் அறிவிக்காவிட்டால், இது வரை நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களைக் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உடனடியாகக் கூட்ட வேண்டும்.
அதில் தமிழகத்திற்கு முதல்கட்டமாக ஜூன்- ஜூலை மாதத்திற்கான 44 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையம் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை ஆணையத்தின் அனுமதியின்றி உள்ளூர் பாசனத்திற்காக கர்நாடக அரசு திறக்கக்கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CauveryManagementBoard
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்